சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் ‘காதல்! காதல்!! காதல்!!!’ என்ற முழுநீள நகைச்சுவை நாடகத்தைத் தயாரித்து ஏப்ரல் 11ஆம் நாள் தர்குட் மார்ஷல் நடுநிலைப் பள்ளியில் அரங்கேற்றியது. சாண்டியேகோவில் வாழும் தமிழர்கள் நடிகர்களாகவும் அரங்க நிர்வாகிகளாகவும் தொண்டாற்றும் இந்த நாடகக்குழுவின் முந்திய நாடகம் ‘காலம் மாறினால்’ என்பதாகும். சாண்டியேகோ தமிழ்ச்சங்கம் பல பத்தாண்டுக் காலமாக சமூக நிகழ்ச்சிகள், திருவிழாக் கொண்டாட்டங்கள், கலை நிகழ்ச்சிகள் போன்றவற்றை நடத்தியும் மற்ற வகைகளிலும் மக்களுக்குத் தொண்டு புரிந்து வருகின்றது. காதலர்களின் தந்தையர் இருவரிடமும் திருமணத்துக்குச் சம்மதம் பெறக் காதலனின் நண்பர்கள் (சலூன் வைத்திருக்கும் பாண்டியும், லாண்டிரிக்கடை முருகேசனும்) செயலாற்றும் அசட்டுத்தனமான திட்டமே ‘காதல்! காதல்!! காதல்!!!’ நாடகத்தின் மையக்கரு. இதற்கிடையில் பிரசாத் என்ற திரைப்பட நடிகரும் வந்து சேர்வது குழப்பத்தை அதிகரிக்கிறது. இறுதியில் பிரசாத் உதவியாளர் பட்டாபியும், சினிமா நடிகை விமலாவும் வகுக்கும் மாற்றுத் திட்டத்தால் குழப்பம் தீர்ந்து அனைவரும் மகிழும்படி கதை இனிது முடிவுறுகிறது. இந்நாடகம் முழுவதும் சாண்டியேகோவில் வசிக்கும் ஷியாம் சுந்தரால் எழுதப்பட்டது. ஷியாம் இயக்குனராகவும் பணியாற்றி, நடிக்கவும் செய்தார். இவருடன் இணைந்து நடித்தவர்களில் சிலர் சாண்டியேகோவின் முந்தைய நாடகங்களில் நடித்தவர்களாயினும், பல புதுமுகங்களும் அறிமுகமானார்கள். புதுமுகங்களில் காதலர்களாக நடித்த கார்த்திக் ஸ்ரீனிவாசன், சுஷ்மிதா இஷிடோர், நடிகை விமலாவாக நடித்த சுஷ்மா நடராஜன் ஆகியோர் குறிப்பிடத் தக்கவர்கள். இவர்களுடன் ராஜ் ராஜசேகரன், அனு ராஜசேகரன், கிருஷ்ணன் லக்ஷிமின், சாய்ராம் குடிவாடா, அசும்தா லியோ குருசுவாமி, செந்தில் செல்லத்துரை, ஜெயபாண்டியன் கோட்டாளம், அசோகன் செல்வராஜ் ஆகியோரும் சேர்ந்து மாறுபட்ட தனிச்சிறந்த குணச்சித்திரங்கள் கொண்ட பதின்மூன்று பாத்திரங்களைச் சிறப்பாகச் சித்தரித்தனர். வெங்கட் வெங்கடேசுவரன், நித்யா சுப்பிரமணியன், பிரதீப் மொகணன்நாயர், கவிதா கண்ணன், வந்தனா பாலன், சுவாமிநாதன் கணேசன், N. ராமசுப்பிரமணியன், பன்னீர்ச் செல்வம் ஆகியோர் இசையமைப்பு, அரங்க நிர்வாகம், ஒலியமைப்பு, ஒளியமைப்பு மற்றும் செயல்களில் பங்கேற்றனர். ரமேஷ் வெங்கட்ராமன் இப் பெரும் முயற்சியின் அனைத்து அங்கங்களிலும் ஆலோசகராக உதவியதுடன், நாடகக் காட்சிகளை நிழற்படங்களாக்கி நிலைக்கச் செய்தார். நாடக முடிவில் M.C.மாதவன் நாடகக் குழுவினருக்குப் பரிசளித்து ஊக்குவித்தார். இந்நாடகத்தின் பத்துக் காட்சிளும் பார்வையாளர்களிடமிருந்து சிரிப்பு அலைகளைத் தொடர்ச்சியாக உருவாக்கிக் கொண்டிருந்தன. நாடகத்தின் உச்சகட்டத்தில் பாண்டியும், பிரசாத்தும் ஒரே சமயத்தில் கதாநாயகி வீட்டுக்கு வர, கதாநாயகியின் தந்தையும் மற்றோரும் ஒருவரை இன்னொருவராக நினைத்துப் பேசுவதும், நடந்துகொள்வதும் மிகவும் வேடிக்கையாகவும் சிரிப்பூட்டுவதுமாக இருந்தது. காட்சிகளுக்குத் தகுந்தவாறு இசையமைத்திருந்ததும், நடிகர்கள் தங்கள் பாத்திரங்களுக்குத் தகுந்தவாறு மிகவும் பொருத்தமான ஆடைகளும் அணிகலன்களும் அணிந்திருந்ததும் நாடகத்துக்கு மேலும் சிறப்பூட்டின. நாடகத்தைப் பார்த்தவர்களில் பலர் ‘சிரிப்பாகவும் விருவிருப்பாகவும் இருந்தது’ என்றும், ‘மேடைக்குப் பின்னிருந்தவர்கள் அருமையாகச் செயல்பட்டிருக்கிறார்கள்’ என்றும், ‘இதற்கெல்லாம் மிகுந்த உழைப்பும் ஆழ்ந்த ஆர்வமும் தேவை’ என்றும் கூறினர். இளைய தலைமுறையினரும் பார்த்து மகிழ்ந்ததுடன் அவர்களில் ஓரிருவர் தமிழில் பேசி நடிக்கவும் ஆர்வம் காட்டினர்.
|